ஆவின் நிறுவனத்தை வலுப்படுத்தினால் மட்டுமே தனியார் பால் விலையைக் கட்டுப்படுத்த முடியும்! அன்புமணி
கடந்த 8 மாதங்களில் தனியார் பால் விலை 3-வது முறையாக உயர்ந்துள்ளதையடுத்து அரசு நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்...
தனியார் பால் விலை, கடந்த 8 மாதங்களில் மூன்றாவது முறையாக உயர்ந்துள்ளதாகவும் ஆவின் நிறுவனத்தை வலுப்படுத்தி பால் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
ஆவினுக்கான பால் கொள்முதல் விலை உயா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, தனியாா் பால் நிறுவனங்கள் இன்று (செப். 26, சனிக்கிழமை) முதல் பால் மற்றும் தயிா் விலையை மீண்டும் உயா்த்துகின்றன.
ஆரோக்யா நிறுவனம் கடந்த செப். 21-ஆம் தேதி பால் விலையை லிட்டருக்கு ரூ. 4 வரையிலும், தயிா் விலையை கிலோவுக்கு ரூ. 2 வரையிலும் உயா்த்தியது. இதைத் தொடா்ந்து டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, சீனிவாசா, வல்லபா, ஜொ்சி உள்ளிட்ட தனியாா் நிறுவனங்களும் இன்று முதல் விலையை உயா்த்துகின்றன.
Advertisement
Advertisement
இதனால் ஆவின் பால் விலைக்கும் தனியார் பால் விலைக்கும் உள்ள வித்தியாசம் லிட்டருக்கு ரூ. 30 வரை உள்ளது. இதனால் ஆவின் பால் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,
"தனியார் பால் விலை 8 மாதங்களில் மூன்றாம் முறையாக உயர்வு: ஆவின் நிறுவனத்திற்கு புத்துயிரூட்டி சந்தையை கட்டுப்படுத்த வேண்டும்!
தமிழ்நாட்டில் தனியார் பால் விலைகள் இன்று முதல் லிட்டருக்கு ரூ. 4 வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன. ஏழை , நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பால் விலையை தனியார் நிறுவனங்கள் மனசாட்சியின்றி மேலும், மேலும் உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது.
3 சதவீத கொழுப்பு சத்து கொண்ட நீல உறை பாலின் விலையை அரை லிட்டருக்கு ரூ. 31-ல் இருந்து ரூ. 32 ஆகவும், 4.5 சதவீத கொழுப்பு சத்து கொண்ட பச்சை உறை பாலின் விலையை ரூ. 35-ல் இருந்து ரூ. 37ஆகவும், 6 சதவீத கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு உறை பாலின் விலையை ரூ. 40-ல் இருந்து ரூ. 42 ஆகவும் தனியார் பால் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இது 2026-ஆம் ஆண்டில் தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ள மூன்றாம் விலை உயர்வு ஆகும்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் இப்போது வரையிலான 8 மாதங்களில் மட்டும் 3 முறை பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் மட்டும் ஜூலை, செப்டம்பர் என இரு முறை தனியார் பால் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
ஆவினில் 3 சதவீத கொழுப்பு சத்துள்ள நீல உறை பால் லிட்டருக்கு ரூ. 40-க்கு விற்கப்படும் நிலையில், தனியார் நிறுவனங்கள் ரூ. 24 கூடுதலாக விற்பனை செய்கின்றன. அதேபோல், பச்சை உறை பால் ஆவினில் ரூ. 44-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தனியார் பால் விலை, ரூ. 30 கூடுதலாக ரூ. 74-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 6 சதவீத கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு உறை ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 60 மட்டும் தான். ஆனால், அதே பாலை தனியார் நிறுவனங்கள் ரூ. 84-க்கு விற்பனை செய்கின்றன.
தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடில்லாமல் பால் விலையை உயர்த்துவதற்கு காரணம் தமிழ்நாட்டின் பால் சந்தையை தனியார் நிறுவனங்கள் அவற்றின் கைகளில் வைத்திருப்பதுதான்.
தமிழ்நாட்டின் பால் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கு, 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி வெறும் 16% மட்டுமே. இப்போது அது 12% அளவுக்கு குறைந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
அதனால், ஆவின் நிறுவனம் குறைந்த விலையில் பால் விற்பனை செய்தாலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் அந்த நிறுவனத்தால் பால் வழங்க முடியாததாலும், தனியார் நிறுவனங்கள் 84% -88% சந்தையை தங்களிடம் வைத்திருப்பதாலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
தனியாருக்கு போட்டியாக தமிழ்நாட்டில் 50% சந்தையை கைப்பற்றும் அளவுக்கு ஆவின் நிறுவனத்தை வலுப்படுத்தினால் மட்டும் தான் தனியார் பால் விலையை கட்டுப்படுத்த முடியும். எனவே, ஆவின் நிறுவனத்திற்கு புத்துயிரூட்டவும், தனியார் பால் விலைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயித்து அதன் விலையை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Private milk prices can be controlled only by strengthening Aavin: Anbumani
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.