தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையைக் காப்பாற்ற ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்: சு. வெங்கடேசன்
தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையைக் காப்பாற்ற ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்தது குறித்து...
தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையைக் காப்பாற்ற ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை (செப். 27) தெரிவித்தார்.
காவல்துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு அளித்த தமிழக அரசின் அரசாணை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒசூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஒசூரில் சிஐடியு சார்பில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சிறப்பு மாநாடு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்து மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:
Advertisement
Advertisement
தமிழகத்தின் முக்கிய தொழில் வளர்ச்சி மையமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் உருவெடுத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இங்கு சுமார் 54 க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்களும், 19,000 க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். புதிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில் முதலீடுகள் ஒசூருக்கு வருவது வரவேற்கத்தக்கது. அதே வேளையில், இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்குச் சட்டப்பூர்வமான அடிப்படை உரிமைகளான முறையான ஊதியம், பணி நேரம் உள்ளிட்டவை முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும். தொழில்துறையின் வளர்ச்சியும் தொழிலாளர்களின் உரிமைகளும் இரு கண்கள் போன்றவை. தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையே இந்தச் சிறப்பு மாநாடு வலியுறுத்துகிறது.
தமிழக அரசின் உள்துறை சார்பில், சட்டம் ஒழுங்கு பிரிவை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கி அரசாணை பிறப்பித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயக அமைப்பில் வெளிப்படைத்தன்மையுடன் கண்காணிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான துறை காவல்துறை. இந்த அரசாணை ஜனநாயக சூழலுக்குப் பாதகமானது. எனவே தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் உடனடியாகத் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரிக்கை:
சுதந்திர இந்தியாவின் தேர்தல் வரலாற்றில் சட்ட விதிகளையும் ஜனநாயக மாண்புகளையும் மீறும் வகையில் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்படுகிறார். அரசமைப்புச் சட்டத்தின் உயரிய அமைப்பான தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையைக் காப்பாற்ற அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இதனை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் வரும் 1ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக நடைபெற்ற சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஒசூரில் நடைபெற்ற ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான சிறப்பு மாநாட்டில் சிஐடியு மாநிலத் தலைவர் தோழர் சவுந்தரராசன், மாவட்டத் தலைவர் ஸ்ரீதர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
Madurai MP Su. Venkatesan stated on Sunday (Sept. 27) that Gyanesh Kumar should resign to uphold the credibility of the Election Commission.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.