மராட்டிய மன்னரின் தமிழ்க் கீர்த்தனைகள்!
திருவாரூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் நிர்வாக அதிகாரியாக 1984-லிலிருந்து பணியாற்றியவர் சு. ஸ்ரீதரன்.
திருவாரூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் நிர்வாக அதிகாரியாக 1984-லிலிருந்து பணியாற்றியவர் சு. ஸ்ரீதரன். அவரின் பணிக்காலத்தில் நடந்த குடமுழுக்கு குறித்தும் அப்போது அவர் கண்டுணர்ந்த செய்தியையும் இங்கே தருகிறார்:
""1988 மார்ச் - ஏப்ரலில் 350 சிவாச்சாரியார்கள், 100 ஓதுவாமூர்த்திகள், 100 வேதவிற்பன்னர்களைக் கொண்டு ஒருவாரகால யாகசாலை பூஜையுடன் (12 காலம்) மிகச் சிறப்பாக குடமுழுக்கு நடைபெற்றது. அதுசமயம் தியாகராஜாவுக்கே உரித்தான பாரிநாயனம், பஞ்சலோகத்தில் ஐந்து முகங்களில் மான்தோலால் கட்டி உருவாக்கப்பட்ட பஞ்சமுகவாத்தியம், சுத்தமத்தளம், கொடுகொட்டி, சிவபெருமானுக்கு மிகவும் ப்ரீத்தியானதென்று காஞ்சி மகாபெரியவரால் குறிப்பிடப்பட்டதும், தற்போது மறைந்தே போனதுமான சத்தக்குழல், வெண்டையம் போன்ற 18 இசைக் கருவிகள் கண்டறியப்பட்டு, அவற்றுள் 12 இசைக் கருவிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
அதுசமயம், பாரிநாயனத்தில் வாசிக்கப்பட்ட சில கேள்விப்படாத சாகித்தியங்கள் பற்றி கோவில் நாதஸ்வர வித்வான் செல்வகணபதியிடம் (இவர் கருணாநிதியின் ஒன்றுவிட்ட சகோதரர்) கேட்டறிந்தேன். அவை தஞ்சையை ஆண்ட மராட்டியைத் தாய் மொழியாகக் கொண்ட மராட்டிய ஷாஜி மன்னரால் இயற்றப்பட்ட தமிழ் கீர்த்தனைகள் என்பதும் தியாகராஜர் மீது அளவற்ற ஈடுபாடு கொண்ட அவர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார் என்பதும் தெரியவந்தது. இதுபற்றி கர்நாடக இசைப் பிரியரான, அப்போதைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் மா.ராமு அவர்களிடம் கூறி, சரஸ்வதி மகால் நூலகத்தில் ஓலைச் சுவடிகளில் இருந்த இந்தப் பாடல்களை நூலகத் தலைவர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியர் மூலம் "ஷாஜி மன்னரின் கீர்த்தனைகள்' என்ற நூலாக திருவாரூர் திருக்கோயிலில் அப்போதைய வருவாய் நிர்வாக ஆணையர் இராமமூர்த்தி ஐ.ஏ.எஸ். அவர்களால் வெளியிடச் செய்தேன்.
இந்த நூலை குடமுழுக்கு விழாவில் பாடவந்த கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களிடம் கச்சேரிக்கு முதல்நாள் கொடுத்தேன். மறுநாள் கச்சேரியில் பெரும்பாலும் இந்த கீர்த்தனைகளையே பாடி வியக்கவைத்தார் ஜேசுதாஸ். மாமன்னர் ஷாஜி தஞ்சையில் 1680 முதல் ஆட்சிபுரிந்தவர். இதன்மூலம் 17-ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் சாகித்யங்கள் இயற்றப்பட்டுவிட்டன என்னும் செய்தியை அறியலாம்'' என்கிறார்.
- சு.ஸ்ரீதரன், நிர்வாக அதிகாரி நிலை - ஐ (ஓய்வு)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.