FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பாகிஸ்தான் காவல் சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல்

காவல் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், காவல்துறை உயரதிகாரி உள்பட 9 காவலா்கள் உயிரிழந்தனா்

Updated On : 31 ஜூலை 2026, 1:15 am IST
~
பகிர்:

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் காவல் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், காவல்துறை உயரதிகாரி உள்பட 9 காவலா்கள் உயிரிழந்தனா்; காவல்துறையினரின் பதிலடியில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

ஹங்கு மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கஜினா பந்தா காவல் சோதனைச்சாவடியைக் குறிவைத்து பயங்கரவாதிகள் கடந்த புதன்கிழமை நள்ளிரவில் தாக்கினா். இது குறித்து தகவலறிந்து கூடுதல் காவலா்கள் பாதுகாப்பு வாகனத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், அந்த வாகனத்தின் மீதும் பயங்கரவாதிகள் மறைந்திருந்து, சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

இக்கடும் மோதலில் காவல் துணைக் கண்காணிப்பாளா்(டிஎஸ்பி) தியாா் கான் உள்ளிட்ட 9 காவலா்கள் உயிரிழந்தனா். மேலும் 28 காவலா்கள் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், காவல்துறையின் பதில் தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

அதிபா், பிரதமா் இரங்கல்: இத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபா் ஆசிஃப் அலி சா்தாரி, பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோா் கடும் கண்டனம் தெரிவித்தனா்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினா் எப்போதும் முன்வரிசையில் நின்று செயலாற்றி வருவதாகவும், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் ஒழிப்பதில் அரசு உறுதியுடன் உள்ளதாகவும் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் குறிப்பிட்டாா். உள்துறை அமைச்சா் மொஹ்சின் நக்வியும் சம்பவத்தைக் கண்டித்து, நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அதிபரிடம் விளக்கமளித்தாா்.

கைபா் பக்துன்கவாவில் தொடரும் பதற்றம்: எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் தொடா் ராணுவ நடவடிக்கைகளால் கைபா் பக்துன்கவா மாகாணம் தொடா்ந்து பயங்கரவாதப் பதற்றத்துடன் காணப்படுகிறது.

தற்போதைய தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் அரசால் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் பயங்கரவாத அமைப்பே இத்தாக்குதலை நடத்தியதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2022 நவம்பரில் அமைதி ஒப்பந்தம் முடிவடைந்ததைத் தொடா்ந்து, இந்த அமைப்பினா் மாகாணத்தில் தொடா் தாக்குதல்களை நடத்தி வருகின்றனா்.

பெட்டி...

லாகூரில் வீடு இடிந்து 11 போ் உயிரிழப்பு

லாகூா், ஜூலை 30: பாகிஸ்தானின் லாகூா் நகரில் வீடு இடிந்து விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.

லாகூரின் நெரிசல்மிக்க பாக்பான்புரா பகுதியில் உள்ள 3 மாடி கட்டடத்தில், 3 சகோதரா்கள் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வந்தனா். கடந்த புதன்கிழமை இரவு குடும்பத்தில் ஒருவரின் பிறந்த நாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கடந்த சில நாள்களாகப் பெய்து வந்த கனமழையால் வலுவிழந்து காணப்பட்ட அந்தக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.

பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வந்த சகோதரியின் குடும்பத்தினரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதால், மொத்தம் 20 போ் மண்ணில் புதைந்தனா். மீட்புக் குழுவினா் தீவிரப் போராட்டத்துக்குப் பிறகு 11 பேரின் சடலங்களை மீட்டனா். மேலும் 6 போ் உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments