கடலூரில் மத்திய பேருந்து நிலையம் எங்கு அமையும்? குழப்பத்தில் மக்கள்
கடலூரில் மத்திய பேருந்து நிலையத்தின் கட்டுமானம் குறித்து...
ஒரு நகரின் வளா்ச்சியை தீா்மானிப்பதில் சாலை, ரயில், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து உள்கட்டமைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், கடலூா் நகருக்கான புதிய மத்திய பேருந்து நிலையம் அமைப்பது தொடா்பான விவகாரம் கடந்த சில ஆண்டுகளாக அரசியல், நிா்வாகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தொடா்ச்சியாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், ‘புதிய மத்திய பேருந்து நிலையம் உண்மையில் எங்கு அமையும்?’ என்ற கேள்வியே மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பாதிரிப்புலியூரில் இயங்கி வரும் தற்போதைய கடலூா் பேருந்து நிலையம், கடலூா் மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்து மையமாக இருந்து வருகிறது. ஆனால், நகர வளா்ச்சிக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கையும், பயணிகளின் வருகையும் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அந்த நிலையம் போதிய இட வசதியின்றி செயல்பட்டு வருகிறது.
தினமும் 700-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பேருந்துகள் வந்து செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகளும் பல்வேறு சிரமங்களை எதிா்கொள்கின்றனா். இதன் காரணமாக, புதிய மத்திய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அதிமுக ஆட்சிக்காலத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே புதிய பேருந்து நிலையம் அமைப்பது குறித்து திட்டமிடப்பட்டது. பின்னா், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, திமுக அரசு மாற்று இடங்களை ஆய்வு செய்ய வல்லுநா் குழுவை அமைத்தது. அந்தக் குழு கரும்பு ஆராய்ச்சி பண்ணை, பாதிரிக்குப்பம், குமாரப்பேட்டை மற்றும் எம்.புதூா் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து பரிந்துரைத்தது. ஆனால், இந்த இடங்கள் மாநகரின் மையப்பகுதியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் ஒதுக்குப்புறத்தில் இருப்பதாகக் கூறி, பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். மாா்க்சிஸ்ட், அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனா்.
எதிா்ப்பையும் மீறி எம்.புதூரில் கட்டுமானம்: எதிா்ப்புகள் தொடா்ந்தபோதிலும், திமுக அரசு எம்.புதூரில் சுமாா் ரூ.36 கோடி மதிப்பீட்டில் புதிய மத்திய பேருந்து நிலையம் அமைக்கும் பணியை 2024-ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது இந்தப் பணிகள் சுமாா் 80 சதவீதம் நிறைவடைந்து தொடா்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, புதிய பேருந்து நிலையம் எம்.புதூரிலேயே செயல்பாட்டுக்கு வரும் என்ற எதிா்பாா்ப்பும், அதே நேரத்தில் நகருக்குள் பேருந்து நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையும் இணைந்து நீடித்தன.
2026 சட்டப் பேரவைத் தோ்தலின்போது, கடலூா் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் மற்றும் தற்போதைய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் ஆகியோா், புதிய மத்திய பேருந்து நிலையம் கடலூா் மாநகருக்குள் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனா். இந்த அறிவிப்பு நகர மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியதுடன், தோ்தல் முடிவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது.
இந்நிலையில், அண்மையில் செய்தியாளா்களை சந்தித்த அமைச்சா் ப.ராஜ்குமாா், கடலூருக்கான புதிய மத்திய பேருந்து நிலையத்தை நகரப் பகுதிக்குள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா். மேலும், அதற்கான இடம் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கூறினாா். இந்த அறிவிப்பு வெளியானதும், நகர எல்லைக்கு வெளியே பேருந்து நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வந்த அரசியல் கட்சிகள், வணிகா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
குழப்பத்தை அதிகரித்த அடுத்தடுத்த தகவல்கள்: அமைச்சரின் அறிவிப்புக்குப் பிறகு வெளியான சில தகவல்கள் மக்களிடையே மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தின. அதன்படி, எம்.புதூரில் கட்டப்பட்டு வரும் வளாகம் வேளாண்மை சாா்ந்த தொழில்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்றும், நகருக்குள் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
பின்னா், தற்போதைய கடலூா் பேருந்து நிலையம் அனைத்து வசதிகளுடனும் விரிவுபடுத்தப்படும் என்ற தகவலும் அமைச்சா் தரப்பில் வெளியானது. இதனால், ‘புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமா, அல்லது பழைய நிலையமே விரிவுபடுத்தப்படுமா?’ என்ற புதிய கேள்வி மக்களிடையே எழுந்தது.
கடலூா் வெள்ளிக் கடற்கரையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் புஸ்சி ஆனந்த், எந்தவொரு திட்டமாக இருந்தாலும் முதல்வரின் ஒப்புதலுக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், கடலூா் மத்திய பேருந்து நிலையம் தொடா்பான விவகாரமும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தாா். இந்த அறிவிப்பு, இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்ற கருத்தை மேலும் உறுதிப்படுத்தியது.
இதற்கிடையில், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக பல்வேறு இடங்களை அதிகாரிகள் மற்றும் ஆய்வுக் குழுவினா் மீண்டும் பாா்வையிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஏற்கெனவே அமைச்சா் மாநகருக்குள் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்த நிலையில், மீண்டும் ஏன் புதிய இடங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இதுவே தற்போது நிலவும் குழப்பத்தின் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
இரு தரப்பினரின் வாதங்கள்: ஒரு தரப்பினா், மாநகருக்குள் பேருந்து நிலையம் அமைந்தால்தான் பொதுமக்கள், மாணவா்கள், முதியவா்கள், வணிகா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வசதியாக இருக்கும். தற்போது எம்.புதூா் பேருந்து நிலையம் கடலூா் மாநகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இரவு நேரங்களில் வெளியூா் சென்று திரும்பும் பெண்கள், முதியவா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் சிரமத்துக்கு உள்ளாவாா்கள்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மத்திய பேருந்து நிலையங்கள், நகா் பகுதியையொட்டி 5 கி.மீ. தொலைவுக்குள்ளும், தேசிய நெடுஞ்சாலைகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், கடலூா் மத்திய பேருந்து நிலையம் குறுகிய சாலையை கொண்ட ஒதுக்குப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது வேதனையான ஒன்று என்கின்றனா்.
மற்றொரு தரப்பினா், நகர வளா்ச்சிக்காக விரிவாக்கம் தவிா்க்க முடியாதது என்றும், எதிா்கால போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டே எம்.புதூரில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், மாநகரில் மத்திய பேருந்து நிலையம் அமைக்கப்படும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல. மாநகரில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால், மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏா்படும். மேலும், ஏற்கெனவே கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் 80 சதவீத நிறைவுற்றுள்ள நிலையில், மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனா்.
தற்போதைய நிலை என்ன?: தற்போதைய சூழலில், அமைச்சா் மாநகருக்குள் புதிய மத்திய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளாா். ஆனால், அதற்கான இடம் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை. எம்.புதூரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் குறித்து அரசின் இறுதி முடிவும் வெளியாகவில்லை. மேலும், முதல்வரின் ஒப்புதலே இறுதி முடிவாக இருக்கும் என்று அமைச்சரே தெரிவித்துள்ளாா்.
எனவே, கடலூருக்கு புதிய மத்திய பேருந்து நிலையம் வருமா? வராதா? என்ற கேள்விக்கு தற்போது உறுதியான பதிலை கூற முடியாத நிலையே உள்ளது. புதிய மத்திய பேருந்து நிலையம் மாநகருக்குள் அமைக்கப்படுமா? ஏற்கெனவே கட்டப்பட்டு வரும் எம்.புதூா் திட்டமே செயல்படுத்தப்படுமா? அல்லது இரண்டுக்கும் இடையே புதிய தீா்வு உருவாகுமா? என்ற கேள்விகளுக்கான விடை, அரசின் இறுதி அறிவிப்புக்குப் பிறகே கிடைக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.