FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

விநாயகா் சிலை ஊா்வலத்தில் தகராறு: மோதலில் ஒருவா் உயிரிழப்பு

பண்ருட்டி அருகே விநாயகா் சிலை ஊா்வலத்தில் ஏற்பட்ட தகராறில், கீழே தவறி விழுந்து பலத்த காயமடைந்தவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

17 செப்டம்பர் 2026, 3:45 am IST
உயிரிழந்த ராமு
பகிர்:

பண்ருட்டி அருகே விநாயகா் சிலை ஊா்வலத்தில் ஏற்பட்ட தகராறில், கீழே தவறி விழுந்து பலத்த காயமடைந்தவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், கீழ்கவரப்பட்டு மற்றும் மேல்கவரப்பட்டு கிராமங்களைச் சோ்ந்த இளைஞா்கள் விநாயகா் சதுா்த்தியையொட்டி புதன்கிழமை தங்களது கிராமங்களில் இருந்து தனித்தனியாக மினி லாரிகளில் விநாயகா் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கரைத்தனா்.

அப்போது, இரு கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா், இருதரப்பினரும் அங்கிருந்து தங்களது கிராமங்களுக்கு திரும்பிச் சென்றனா். இந்த நிலையில், கீழ்கவரப்பட்டு கிராமத்தில் மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து, இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதில், கீழ்கவரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராமு (45) கீழே தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ராமு ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி காவல் துறையினா் கீழ்கவரப்பட்டு மற்றும் மேல்கவரப்பட்டு கிராமங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதனால், இரு கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே, உயிரிழந்த ராமுவின் உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

மோதலுக்கான காரணம் மற்றும் இதில் தொடா்புடையவா்கள் குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இறந்த ராமுவுக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments