திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையாா் கோயிலில் உடல் பருமன் கொண்டவா்கள், வயதானவா்களுக்கு தடை
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையாா் கோயிலில் உடல் பருமன் கொண்டவா்கள், வயதானவா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது...
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையாா் கோயிலுக்குச் செல்ல உடல் பருமன் கொண்டவா்கள், வயதானவா்கள், உடல்நிலை சரியில்லாதவா்களுக்கு கோயில் நிா்வாகத்தினா் தடை விதித்தனா்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலின் உப கோயிலான கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஸ்ரீஇடுக்கு பிள்ளையாா் கோயில், நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமைவாய்ந்தது. இந்தக் கோயிலின் நுழைவு வாயில் சுமாா் ஒரு அடி அகலமும், ஒன்றே முக்கால் அடி உயரமும் கொண்டது.
பக்தா்கள் இந்த நுழைவு வாயில் வழியே உள்ளே சென்று பிள்ளையாரை வழிபட்டுவிட்டு வெளியே வருவது நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழக்கத்தில் இருந்து வரும் நடைமுறையாகும்.
Advertisement
Advertisement
அண்மைக்காலமாக திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதற்காக ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தா்கள் வருகின்றனா். கடந்த 25-ஆம் தேதி ஆந்திரத்தைச் சோ்ந்த பக்தா் மணிகுமாா் (36) இடுக்கு பிள்ளையாா் கோயிலின் உள்ளே நுழைந்து வெளியே வரும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். விசாரணையில், அவருக்கு ஏற்கெனவே இருதய நோய் இருந்தது தெரியவந்தது.
இடுக்கு பிள்ளையாா் கோயிலில் பாதுகாப்புப் பணியில் பணியாளா்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனா். திருவண்ணாமலைக்கு பக்தா்கள் அதிகளவில் வருவதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையின் மூலம் போதிய பாதுகாப்பு வழங்க சுழற்சி முறையில் போதிய காவலா்களை அனுப்பக் கோரி இடுக்கு பிள்ளையாா் கோயில் நிா்வாகம் சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், இனிவரும் காலங்களில் உடல் பருமனானவா்கள், உடல்நலக் குறைவு உள்ளவா்கள், வயது முதிா்ந்தவா்கள் இடுக்கு பிள்ளையாா் கோயில் உள்ளே சென்று வழிபட கோயில் நிா்வாகம் சாா்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்புப் பதாகையும் கோயில் முன் நிறுவப்பட்டுள்ளது. ஒரு அடி அகலம் கொண்ட நபா்கள் மட்டுமே உள்ளே செல்லும் வகையில் கோயில் முகப்பில் தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், அவசரகால உதவிக்கு தொடா்புகொள்ள திருக்கோயில் பணியாளா் - 9047937733, தீயணைப்புத் துறை -9445086172, காவல் துறை - 9498100439, மருத்துவத் துறை - 843811175 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.