FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த இயலுமா?: மோடிக்கு காங்கிரஸ் சவால் 

ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த இயலுமா? என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது.

Updated On : 14 டிசம்பர் 2018, 3:10 pm IST
பகிர்:

புது தில்லி: ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த இயலுமா? என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது. 

இந்திய விமானப் படைக்காக, பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ரூ.58,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. 

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிக விலை வழங்கப்பட்டுள்ளதாகவும்; விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் அக்கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

Advertisement

Advertisement

அதைத்தொடர்ந்து ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் சௌரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கில் வெள்ளியன்று தீர்ப்பை வெளியிட்ட நீதிபதிகள், ரஃபேல் போர் விமானம் வாங்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்று தெரிவித்துள்ளனர். எனவே ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ஒப்பந்தத்தில் சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் நீதிமன்றம் அதனை விசாரித்தது. ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான கொள்கை முடிவு, தொகை, ஒப்பந்ததாரர் ஆகிய அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டது. விசாரணை முடிவில் மத்திய அரசின் ஒப்பந்தம் சரியானதுதான் என்று தெரிய வந்துள்ளது.

வணிக ரீதியாக எந்த சலுகையும் அளிக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை, ரஃபேல் ஒப்பந்தம் சரியானதுதான், திருப்தி அளிக்கிறது என்று தெரிய வந்திருப்பதால், அந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடாது. 

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த இயலுமா? என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது. 

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த ஒப்பந்தத்தால் பல்வேறு அடுக்குகளில் ஊழல் நடைபெற்றுள்ளது. அது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்று எங்களுக்குத் தெரியும். எனவேதான் காங்கிரஸ் இவ்வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. 

எனவே நான் ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த இயலுமா? என்று பிரதமர் மோடிக்கு சவால் விடுக்கிறேன். நீங்கள் அஞ்சவில்லை என்றால் ஏன் கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கூடாது? விமானங்களின் விலை ரூ. 526 கோடியில் இருந்து எவ்வாறு ரூ.1670 கோடியாக உயர்ந்தது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். 

இந்த ஒப்பந்தம் தொடர்பான அரைகுறையான உண்மைகள் மட்டுமே உச்ச நீதிமன்றத்திற்கு மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments