இந்திய நிலபரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதற்கு மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங் எதிர்வினையாற்றி பேசினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த புதன்கிழமை தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று முதல் பிப். 4 வரை நடைபெறுகிறது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே எழுதியதாகக் கூறப்படும், வெளிவராத ஒரு புத்தகத்தின் கட்டுரையில் இருந்ததை ராகுல் காந்தி மேற்கோள் காட்டியதால் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், "வெளியிடப்படாத, நம்பகத்தன்மையற்ற ஒரு புத்தகத்தில் இருந்த கருத்துகளை மேற்கோள் காட்ட முடியாது” என்றார்.
இதனைத் தொடர்ந்து, "இந்தியா-சீனா உறவுகள் குறித்து நான் பேசக்கூடாது என்று எந்த விதி கூறுகிறது என்பதை தயவுசெய்து சொல்லுங்கள்” என்று ராகுல் காந்தி கூறினார்.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பதிலளித்து பேசுகையில், "விவாதத்திற்காகப் பட்டியலிடப்பட்ட தலைப்பில் இந்தியாவோ அல்லது சீனாவோ இடம்பெறவில்லை. நாம் அனைவரும் அவையின் மற்றும் நாட்டின் கண்ணியத்தைக் காக்க வேண்டும். நாட்டின் கெளரவத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிரச்னைகளை நீங்கள் எழுப்பக் கூடாது” என்றார்.
தொடர்ந்து ராகுல் காந்தி பேசுகையில் "குடியரசுத் தலைவர் உரைக்கும் சர்வதேச உறவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறீர்களா? பாகிஸ்தான், சீனா அல்லது வேறு எந்த நாட்டைப் பற்றியும் நாங்கள் பேசக் கூடாது என்று சொல்கிறீர்களா? நான் பேசவிருப்பது 100 சதவீதம் உறுதிபடுத்தப்பட்ட தகவல். ஆதாரப்பூர்வமற்ற எதையும் அவையில் நான் குறிப்பிடவில்லை" என்றார்.
தொடந்து பேசிய ராகுல் காந்தி, ”முன்னாள் ராணுவத் தளபதி நரவனே எழுதிய புத்தகத்தில், இந்தியாவின் நிலபரப்பை சீனா ஆக்கிரமித்து இருப்பதற்கான தகவல் உள்ளது. அதனால் அரசு நரவனே சுயசரிதை புத்தகத்தை வெளியிடாமல் தடுக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடந்து, ராகுல் காந்தியின் மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் ராகுல் காந்திக்கு ஆதரவாக சமாஜவாதி கட்சி எம்.பி. அகிலேஷ் யாதவ் பேசுகையில், ”நாங்கள் பேசுவதற்கு ஏன் மக்களவைத் தலைவர் மறுக்கிறார். பிரதான பிரச்னையை அவையில் எழுப்புவதற்கு எதிர்க்கட்சி தலைவருக்கு உரிமை உள்ளது" என்றார்.
அவைக்கு தொடர்பு இல்லாத புத்தகத்தில் உள்ள கருத்துகளை மேற்கோள் காட்டக் கூடாது என்று தெரிவித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவையை ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.