முதல் கட்ட அமர்வு நிறைவு! நாடாளுமன்ற இரு அவைகளும் மார்ச் 9-க்கு ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது பற்றி...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இரு அவைகளும் மார்ச் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன. 28 ஆம் தேதி குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில் பிப். 1 ஆம் தேதி 2026 - 27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தொடரில் சீன ஆக்கிரமிப்பு, இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.
Advertisement
Advertisement
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்த நிலையில், பிப். 4 அன்று மக்களவையில் தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று கூறப்பட்ட நிலையில் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை. எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் சதி செய்யத் திட்டமிட்டிருந்ததால் பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என்று தான் கூறியதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா கூறினார். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் நடவடிக்கைகள் தொடர்பான விடியோக்களை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இன்றும் இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், ராணுவ முன்னாள் தளபதி நரவணேவின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவை குறித்து விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின. எப்ஸ்டீன் கோப்புகளுடன் தொடர்புடைய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மார்ச் 9 ஆம் தேதிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர்கள் தனித்தனியே அறிவித்தனர்.
இதன்படி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன்(பிப். 13) நிறைவடைந்தது. இரண்டாம் அமர்வு மார்ச் 9 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2 வரை நடைபெறவிருக்கிறது.
Parliament Budget Session: Both Housed adjourned, to resume on March 9
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.