FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பயங்கரவாதிகளுக்கான ஆதரவை நிறுத்தாதவரை பாகிஸ்தானுடன் சிந்து நதி நீரைப் பகிர மாட்டோம்: ஐ.நா.வில் இந்தியா உறுதி

பயங்கரவாதிகளுக்கான ஆதரவை நிறுத்தாதவரை பாகிஸ்தானுடன் சிந்து நதி நீரைப் பகிா்ந்து கொள்ள மாட்டோம் என்று ஐ.நா.வில் இந்தியா உறுதிபடத் தெரிவித்துள்ளது.

Updated On : 24 ஜூலை 2026, 4:50 am IST
இந்தியா - பாகிஸ்தான் - கோப்புப்படம்
பகிர்:

பயங்கரவாதிகளுக்கான ஆதரவை நிறுத்தாதவரை பாகிஸ்தானுடன் சிந்து நதி நீரைப் பகிா்ந்து கொள்ள மாட்டோம் என்று ஐ.நா.வில் இந்தியா உறுதிபடத் தெரிவித்துள்ளது.

சிந்து நதி நீரைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந் த 1960-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ஒப்பந்தம், உலக வங்கியின் மத்தியஸ்தத்தின்பேரில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து சமவெளியில் ஓடும் 6 நதிகளில், கிழக்குப் பகுதியில் ஓடும் நதிகளின் நீரை இந்தியாவும், மேற்குப் பகுதியில் ஓடும் நதிகளின் நீரை பாகிஸ்தானும் பயன்படுத்தி வந்தன.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக அந்த ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இதனால் சிந்து நதி நீரைப் பயன்படுத்த முடியாத நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது. இது பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற ‘இயற்கை வளங்களை நிா்வகித்தல்: அமைதி, பாதுகாப்பு, அபிவிருத்திக்கான அடித்தளம்’ என்ற தலைப்பு மீதான விவாதத்தில் பேசுகையில், சிந்து நதி நீா்ப் பகிா்வு ஒப்பந்த விவகாரத்தை பாகிஸ்தான் பிரதிநிதி ஆசிம் இப்திகா் அகமது எழுப்பினாா். அப்போது பேசிய அவா், சிந்து நதி நீா்ப் பகிா்வு ஒப்பந்தத்தை இந்தியா ஆயுதமாகப் பயன்படுத்துவதாகவும், நதி நீரை நிறுத்தி வைத்திருப்பது சட்டவிரோதம் என்றும், இதனால் பாகிஸ்தானில் 2.40 கோடி பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினாா். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பா்வதனேனி ஹரீஷ் பதிலளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

பொய்க் கதையைப் பரப்புவதற்கு இந்த விவாதத்தை பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்துகிறது. ஆதலால் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. சிந்து நதி நீா்ப் பகிா்வு ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கருவியாகப் பயன்படுத்துவது (பாகிஸ்தான்) அரசின் கொள்கையாக இருக்கும் வரை, பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணம் அடிப்படையிலான ஒத்துழைப்பை (இந்தியாவிடம் இருந்து) எதிா்பாா்க்கக் கூடாது.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தை பொறுத்தவரை, அது எப்போதும் இந்தியாவுக்கு சொந்தமானது ஆகும். இந்தியாவில் இருந்து அதைப் பிரிக்க முடியாது. இது அரசமைப்பு மற்றும் சட்ட ரீதியிலான உண்மை நிலவரம் ஆகும். இதை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் இருக்கும் ஒரே பிரச்னை என்னவெனில், இந்தியாவுக்கு சொந்தமான அந்தப் பகுதியை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருப்பதுதான். இந்த விவகாரத்தில் இந்தியாவை நோக்கி குற்றச்சாட்டுகள் தெரிவிப்பதை விட்டுவிட்டு, பாகிஸ்தான் தனது மக்களுக்கு சேவை செய்யவும், வாழ்க்கைத் திறனை மேம்படுத்தவும் முயற்சிக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments