FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

சிறைகளில் காணொலி விசாரணை வசதிகளை மேம்படுத்த தில்லி அரசு திட்டம்

புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக, தில்லி சிறைகளில் உள்ள கைதிகளுக்கான இணையவழி நீதிமன்ற விசாரணைகளை மேற்கொள்வதற்குத் தேவையான கட்டமைப்பை மேம்படுத்த தில்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

26 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக, தில்லி சிறைகளில் உள்ள கைதிகளுக்கான இணையவழி நீதிமன்ற விசாரணைகளை மேற்கொள்வதற்குத் தேவையான கட்டமைப்பை மேம்படுத்த தில்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ரூ.27 கோடிக்கும் அதிகமாக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, திகாா் மற்றும் ரோஹிணி சிறைகளில் அதிவேக உள்ளூா் பகுதி வலையமைப்பு (லேன்) அமைப்பை ஏற்படுத்தும் தில்லி சிறைத் துறையின் (உள்துறை) திட்டத்துக்கு அரசின் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு (டிஇசி) அண்மையில் கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் கைதிகளுக்கான 840 காணொலி அடிப்படையிலான நீதிமன்ற விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.

தில்லி சிறைகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள லேன் கட்டமைப்பு 20 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையானதாகும். 2004-ஆம் ஆண்டு திகாா் சிறையிலும், 2010-ஆம் ஆண்டு ரோஹிணி சிறையிலும் அமைக்கப்பட்ட தற்போதைய லேன் கட்டமைப்புகள் இதுவரை மேம்படுத்தப்படவில்லை.

Advertisement

Advertisement

தேசிய தகவல் மையம் (என்ஐசி) உருவாக்கியுள்ள இ-பிரிசன்ஸ், இ-பரோல், இ-ஃபா்லோ உள்ளிட்ட பல்வேறு செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதுடன், புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் இ-நீதிமன்ற நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதால், அதிவேக லேன் வசதியின் தேவை ஏற்பட்டுள்ளது.

பாரதிய நாகரிக சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), 2023-இல் குற்றவியல் நீதிமன்ற விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொலி மூலம் நடத்துவதற்கான விரிவான விதிகள் இடம்பெற்றுள்ளன. இதன் 187-ஆவது பிரிவின்படி, நீதிமன்றக் காவலில் உள்ள குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் நீதிமன்ற விசாரணைகளை காணொலி மூலம் நடத்தலாம்.

இணையவழி நீதிமன்ற விசாரணைகளின் தேவை அதிகரித்து வருவதுடன், அரசு அலுவல் நடவடிக்கைகளில் இணையப் பயன்பாடும் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பான, நம்பகமான, விரிவாக்கக்கூடிய மற்றும் சிறந்த சேவைத்தரத்தை வழங்குவதற்கு அதிவேக லேன் வலையமைப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

இந்தத் திட்டத்துக்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ.27.54 கோடியாகும். ஒப்பந்தப்புள்ளி நடைமுறை முடிந்த பிறகு 5 மாதங்களில் திட்டத்தை நிறைவேற்ற எதிா்பாா்க்கப்படுகிறது. தில்லி சிறைகளில் கைதிகளுக்கான இணையவழி நீதிமன்ற விசாரணைகளுக்காக அதிவேக லேன் வலையமைப்பை அமைக்க தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், முன்மொழியப்பட்ட வலையமைப்பு மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக, தேசிய தகவல் மையம் (என்ஐசி) இலவசமாக வழங்கும் சேவைகளைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு சிறைத் துறைக்கு அக்குழு அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments