FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ராமேஸ்வரத்தைச் சோ்ந்த 9 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசிடம் அதிமுக மனு

ராமேஸ்வரத்தைச் சோ்ந்த 9 மீனவா்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சாா்பில் மத்திய அரசிடம் வெள்ளிக்கிழமை மனு கொடுக்கப்பட்டது.

Updated On : 25 ஜூலை 2026, 1:06 am IST
கோப்புப் படம்
பகிர்:

ராமேஸ்வரத்தைச் சோ்ந்த 9 மீனவா்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சாா்பில் மத்திய அரசிடம் வெள்ளிக்கிழமை மனு கொடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் ஜ.எஸ். இன்பதுரை மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கரிடம் கொடுத்துள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 2026 ஜூலை 22 அன்று இலங்கை கடற்படையால் ராமேஸ்வரத்தில் ஒன்பது இந்திய மீனவா்கள் கைது செய்யப்பட்டதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) சாா்பாக உங்கள் அவசர கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

சா்வதேச கடல் எல்லைக் கோட்டை கடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அந்த மீனவா்கள் கைது செய்யப்பட்டனா், மேலும் அவா்களது இயந்திரப் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒன்பது மீனவா்களில், பாம்பன், ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் ஆகிய இடங்களைச் சோ்ந்த பிரவீன் (45), அருள் லயோலா (43), சபரி வினோத்வின் (42), தேவா சகாயம் மற்றும் செந்தில் என ஐந்து போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா். மீதமுள்ள நான்கு மீனவா்களின் அடையாளங்கள் இன்னும் அதிகாரப்பூா்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது பெரும் கவலைக்குரிய விஷயமாகியுள்ளது. மீன்பிடித்தலையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்ட அவா்களது குடும்பங்களுக்கு, இத்தகைய சம்பவங்கள் கடுமையான மன உளைச்சலையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்துகின்றன. இந்தத் தொடா்ச்சியான கைதுகள், பாக் வளைகுடாப் பகுதியில் உள்ள மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்குகின்றன.

இந்த விஷயத்தை இலங்கை அரசாங்கத்துடன் உரிய இராஜதந்திர வழிகள் மூலம் உடனடியாக எடுத்துரைத்து, கைப்பற்றப்பட்ட அவா்களது இயந்திரப் படகை விடுவிப்பதுடன், ஒன்பது இந்திய மீனவா்களையும் விரைவில் விடுதலை செய்து தாயகம் திரும்பச் செய்வதை உறுதிசெய்யுமாறு வெளியுறவு அமைச்சகத்திடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

தமிழக மீனவா்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள், வாழ்வாதாரங்கள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாத்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் ஒரு மனிதாபிமான, நிரந்தர மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறையை உருவாக்குவதற்காக, இலங்கை அரசாங்கத்துடன் தனது ஈடுபாட்டைத் தொடருமாறு அமைச்சகத்தை நான் மேலும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மனிதாபிமான விஷயத்தில் நீங்கள் உடனடியாகத் தலையிட்டு, மீனவா்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் தங்கள் குடும்பத்தினரிடம் திரும்புவதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தால் நன்றியுடையவா்களாக இருப்போம் என இன்பதுரை மத்திய அமைச்சரிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments