FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

3-வது டி20: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள்!

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்ட நிலையில், 3-வது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் ஆறுதல் வெற்றி.

Updated On : 13 பிப்ரவரி 2024, 6:53 pm IST
படம் | எக்ஸ்
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (பிப்ரவரி 13) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 29 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து ஷெர்ஃபேன் ரூதர்போர்டு அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் சேவியர் பார்ட்லெட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேசன் பெஹ்ரண்டிராஃப், ஸ்பென்சர் ஜான்சன், ஆரோன் ஹார்டி மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

Advertisement

Advertisement

இதனையடுத்து, 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். மார்ஷ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஆரோன் ஹார்டி (16 ரன்கள்), ஜோஷ் இங்லிஷ் (1 ரன்), கிளன் மேக்ஸ்வெல் (12 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 49 பந்துகளில் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ஆட்டத்தின் இறுதியில் டிம் டேவிட் அதிரடியாக 19 பந்துகளில் 41 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணியால் 183 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்டு மற்றும் ராஸ்டன் சேஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அகீல் ஹொசைன் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்ட நிலையில், 3-வது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments