டி20 தொடர்களில் பும்ரா, ஹார்திக் சேர்க்கப்படாதது ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்!
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹார்திக் பாண்டியா சேர்க்கப்படாதது குறித்து...
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹார்திக் பாண்டியா சேர்க்கப்படாதது ஏன் என்பது குறித்து அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
இந்திய அணி இம்மாத இறுதியில் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன் பின், இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் முக்கிய வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹார்திக் பாண்டியா சேர்க்கப்படவில்லை.
Advertisement
Advertisement
டி20 தொடர்களுக்கான அணியில் இவர்கள் இருவரும் சேர்க்கப்படாதது குறித்து அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்ததாவது: ஜஸ்பிரித் பும்ரா போன்ற பந்துவீச்சாளர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது நமக்குத் தெரியும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு இந்திய அணிக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணி விளையாடவுள்ள 9 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியால் தகுதி பெற முடியும்.
இந்தப் போட்டிகள் அனைத்திலும் ஜஸ்பிரித் பும்ரா விளையாடும் அளவிற்கு அவர் உடல் தகுதியுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் போட்டிகள் அனைத்திலும் அவர் விளையாடினால், அது இந்திய அணிக்கு சிறப்பான விஷயமாக இருக்கும். நிறைய டி20 போட்டிகள் இருக்கின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இருக்கின்றன. பும்ராவை எப்போது வேண்டுமானாலும் டி20 அணிக்குள் கொண்டு வந்துவிடலாம். தற்போது, அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்கு முழு உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா இடம்பெற்றுள்ளார். பும்ராவைப் போன்று, ஹார்திக் பாண்டியாவை ஒருநாள் போட்டிகளுக்காக முழு உடல்தகுதியுடன் வைத்திருக்க விரும்புகிறோம். அவர் அண்மையில் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை என நினைக்கிறேன். அவரையும் எப்போது வேண்டுமானாலும் டி20 அணிக்குள் கொண்டு வந்துவிடலாம். டி20 தொடருக்கான இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா இல்லாதது நிதீஷ் குமார் ரெட்டி போன்ற வீரர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டி20 போட்டிகளைப் பொருத்தவரை வீரர்களுக்கு ஓய்வளித்து சுழற்சி முறையில் அணியில் தேர்வு செய்து கொள்ளலாம். ஹார்திக் பாண்டியாவை ஒருநாள் போட்டிகளுக்காக முழு உடல்தகுதியுடன் வைத்திருப்பதே எங்களது நோக்கம் என்றார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் (2025-2027) இந்திய அணி இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன் பின், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
Regarding the exclusion of Jasprit Bumrah and Hardik Pandya from the Indian squad for the T20 series against Ireland and England...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.