FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ரோஹித், கோலி, சூர்யகுமார் அபார ஆட்டம்: 179 ரன்கள் குவித்த இந்திய அணி!

நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர்களில்...

Updated On : 27 அக்டோபர் 2022, 2:21 pm IST
பகிர்:

நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் ஆட்டத்தில் பரபரப்பான முறையில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணி, நெதர்லாந்துக்கு எதிராக சிட்னியில் இன்று விளையாடி வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த ரோஹித் சர்மா இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை என்று அறிவித்தார்.  இதனால் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்களான அஸ்வினும் தினேஷ் கார்த்திக்கும் இன்றைய ஆட்டத்திலும் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டது. நெதர்லாந்து அணியிலும் எவ்வித மாற்றமும் இல்லை என அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்தார்.

முதல்முறையாக டி20 சர்வதேச ஆட்டத்தில் இந்தியாவும் நெதர்லாந்தும் மோதுகின்றன. சூப்பர் 12 சுற்றில் இடம்பெற்றுள்ள ஒரே அசோசியேட் அணியான நெதர்லாந்து, முதல் ஆட்டத்தில் நூலிழையில் வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது. 

Advertisement

Advertisement

3-வது ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் கே.எல். ராகுல். இதற்கு டிஆர்எஸ் முறையீடு கேட்கலாமா என ரோஹித் சர்மாவிடம் விவாதித்தார் ராகுல். ஆனால் தேவையில்லை என அவர் சொன்னதால் ஓய்வறைக்குத் திரும்பினார் ராகுல். ஆனால் லெக் ஸ்டம்பைப் பந்து தவறவிட்டது பிறகு தெரிய வந்தது. இதனால் ராகுல், டிஆர்எஸ் முறையீடு கோரியிருந்தால் நிச்சயம் ஆட்டமிழக்காமல் இருந்திருப்பார்.

ராகுல் செய்த தவறை ரோஹித் சர்மா செய்யவில்லை. 27 ரன்களில் அவர் இருந்தபோது வான் பீக் வீசிய பந்து காலில் பட்டது. இதை எல்பிடபிள்யூ என அறிவித்தார் நடுவர். எனினும் டிஆர்எஸ் முறையீடு கோரினார் ரோஹித் சர்மா. இதில் பந்து, மட்டையில் பட்டு பிறகு கால்காப்பில் பட்டது தெரியவந்ததால் நடுவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். 39 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா.

இதன்பிறகு கோலியும் சூர்யகுமார் யாதவும் அற்புதமாக விளையாடி ரன்கள் குவித்தார்கள். ஆடுகளம் பேட்டிங் செய்வதற்குச் சற்று கடினமாக இருந்ததால் நிறைய ரன்களை ஓடியும் எடுத்தார்கள். 37 பந்துகளில் சதமடித்தார் விராட் கோலி. தொடர்ச்சியாக இரு அரை சதங்களை இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அவர் எடுத்துள்ளார். 18-வது ஓவரில் 150 ரன்களை எடுத்தது இந்திய அணி.

20-வது ஓவரின் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் சூர்யகுமார் யாதவ். 25 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார். கோலி 44 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. கோலி - சூர்யகுமார் கூட்டணி 3-வது விக்கெட்டுக்கு 8 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்து அசத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments