வேளாண் பட்ஜெட் 2026! விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுமா தவெக அரசு?
விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்றுமா? என்பதைப் பற்றி...
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு நிறைவேற்றுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில் நேற்று (ஆக. 6) தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டை வறுமையில்லாத செழுமை மிகுந்த, 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்த உறுதி பூண்டுள்ள தவெக அரசு பொது பட்ஜெட்டிலிருந்து வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
Advertisement
Advertisement
தேர்தலுக்கு முன்னதாக தவெக அரசு அறிவித்த வாக்குறுதிகளில் மகளிருக்கான ரூ. 2,500, ஆண்டுக்கு 6 சிலிண்டருக்கான பணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையில், தவெக அரசின் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட், சட்டப்பேரவையில் இன்று காலை 9.30 மணியளவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் ஆர். வினோத் முதல்முறையாக தாக்கல் செய்கிறார். தேர்தலுக்கு முன்னதாக, விவசாயிகளுக்கு கொடுத்த தவெகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விவசாயிகளுக்கான தவெகவின் வாக்குறுதிகள்
5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளுக்குக் கூட்டுறவுப் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% தள்ளுபடி அளிக்கப்படும்.
விளைபொருட்களுக்குச் சட்டப்பூர்வ ஆதரவு விலை உறுதி செய்யப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்.
சாகுபடியாளர் உரிம அட்டை மூலம், குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 நேரடி முதலீட்டு உதவி வழங்கப்படும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க 100% பயிர் காப்பீடு உறுதி செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்ற தவெக தலைவர் ச. ஜோசப் விஜய், கடந்த மே 25 ஆம் தேதி விவசாயிகளுக்கான முதல் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். “கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ. 50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து” என்று அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன.
அதைத்தொடர்ந்து ஜூன் 16 ஆம் தேதி ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது. இருப்பினும், முழுமையாக கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன.
தேர்தலுக்கு முன்னதாக கொடுத்த 5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளுக்குக் கூட்டுறவுப் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க 100% பயிர் காப்பீடு, போதிய அளவில் காவிரி நீர் வராததால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம், நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,500 ஆகவும், கரும்பு டன்னுக்கு ரூ. 5,000 ஆகவும் உயர்த்தி வழங்குதல், உழவர்களுக்கு உரிமைத் தொகையாக ஆண்டுக்கு ரூ. 24,000, சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ. 15,000 உற்பத்தி மானியம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்படுமா? என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
TVK government prepares its first agriculture Budget in Tamil Nadu, farmers, traders pitch reforms for water
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.