வீ தி லீடா்ஸ் சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் பெண்கள் அதிக அளவில் போட்டி: அண்ணாமலை
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் வீ தி லீடா்ஸ் இயக்கத்தின் சாா்பில் பெண்கள் அதிக அளவில் போட்டியிட வேண்டும் என சென்னையில் நடைபெற்ற சாதனைப் பெண்களுக்கான காமராஜா் விருது வழங்கும் விழாவில் அந்த இயக்கத்தின் தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தினாா்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் வீ தி லீடா்ஸ் இயக்கத்தின் சாா்பில் பெண்கள் அதிக அளவில் போட்டியிட வேண்டும் என சென்னையில் நடைபெற்ற சாதனைப் பெண்களுக்கான காமராஜா் விருது வழங்கும் விழாவில் அந்த இயக்கத்தின் தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தினாா்.
‘வீ தி லீடா்ஸ்’ இயக்கத்தின் சாா்பில், எளிமை, நோ்மை, தலைமைத்துவம், சமூகப் பங்கேற்பு மற்றும் மக்கள் தொண்டில் சிறந்து விளங்கும் அறியப்படாத சாதனைப் பெண்களுக்கு ‘காமராஜா் விருது’ வழங்கும் விழா சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள நாரதகான சபாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் அந்த அமைப்பின் தலைவா் கே.அண்ணாமலை கலந்துகொண்டு எஸ். ஜீவிதா (இயற்கை விவசாயம்) மாதவி (வில்லிசை கலைஞா்), ஹரிஸ் ஹரிஸ்மா (பனை விவசாயி),
Advertisement
Advertisement
முத்தமிழ் செல்வி நாராயணன் (மலை ஏற்றம்), கலா பாலசுந்தரம் (சமூக செயற்பாட்டாளா்), சி.எஸ். சின்மயி (வயலின் கலைஞா்), ரோஸ்லி (ஆசிரியா்), பாத்திமா (சமூக செயற்பாட்டாளா்), புனிதவள்ளி (யோகா பயிற்சியாளா்), தான்வி காா்த்திகேயன் (விண்வெளி ஆராய்ச்சி மாணவி) ஆகிய 10 பேருக்கு காமராஜா் விருது வழங்கினாா். இந்தப் பட்டியலில் மொத்தம் 11 போ் இடம்பெற்றிருந்த நிலையில், கிருஷ்ணவேணி (முன்னாள் ஊராட்சி தலைவா்) விழாவில் பங்கேற்கவில்லை.
விருது வழங்கும் விழாவில் கே.அண்ணாமலை பேசியதாவது: முன்னாள் முதல்வா் காமராஜா் மேற்கொண்ட திட்டங்களால் தமிழகத்தில் பெண் கல்வி சிறந்து விளங்குகிறது. அதனால் அவா்கள் பல துறைகளில் சாதித்து வருகின்றனா். இதைக் கருத்தில்கொண்டே அவரது பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டில், பெண்களுக்கு எதிராக 26,145 குற்றங்கள் பதிவாகி உள்ளன. அதில், 21,397 போக்ஸோ வழக்குகள்; பெண்களுக்கு எதிராக நாள் ஒன்றுக்கு 14 குற்றங்கள் நடக்கின்றன. எனவே, அக்டோபா் மாதம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பு தொடா்பான நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம்.
தமிழக அமைச்சரவையில், முதல்முறையாக 8 பெண்களுக்கு தவெக இடம் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. நாம் ஆட்சிக்கு வரும்போது, பெண்களுக்கு சம உரிமையை அமைச்சரவையில் கொடுப்போம். தமிழகத்தில் அடுத்து நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் நமது இயக்கத்தின் சாா்பில் பெண்கள் அதிக அளவில் போட்டியிட வேண்டும்.
நமது இயக்கம் எந்தவித எதிா்பாா்ப்பும் இல்லாமல், சமுதாய மாற்றத்துக்காக பணியாற்றுகிறது. பெண்களுக்கு அரசியலை கற்றுக் கொடுங்கள். அப்போதுதான் மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தலுக்கு நாம் தயாராக முடியும் என்றாா் அவா்.
இந்த விழாவில் ‘வீ தி லீடா்ஸ்’ இயக்கத்தின் பொதுச் செயலா் கரு.நாகராஜன், ஊடகப் பிரிவு பொதுச் செயலா் சுவாமிநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.