FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜெம் வீரமணி வழக்கில் பல காவல் அதிகாரிகளுக்கு தொடர்பு! 3 மாதங்களில் மின்வெட்டு சரியாகும்! நிர்மல்குமார்

ஜெம் வீரமணி வழக்கு, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பதில்...

26 செப்டம்பர் 2026, 12:20 pm IST
அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி. - கோப்புப் படம்
பகிர்:

ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறையினர் பலருக்கு தொடர்பு உள்ளது என்றும் மின்வெட்டு பிரச்னைகள் 3 மாதங்களில் சரிசெய்யப்படும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

மதுரையில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து காந்தி அருங்காட்சியகத்தில் இன்று அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் விஜய், தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் புதிய திட்டத்தை வரும் திங்கள்கிழமை தொடங்கி வைக்க உள்ளார். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தையும் முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "ஜெம் வீரமணி வழக்கில் திமுக அரசு கையாண்ட விதம் தவறானது. திமுக இந்த விவகாரத்தில் அதிகமாக எதிர்வினையாற்றுவது, வழக்கில் ஏதோ தவறு இருப்பதை காட்டுகிறது.

முன்னாள் அமைச்சர் ரகுபதி, ஜெம் வீரமணி தொடர்புடைய விடியோ சரியாக இல்லை எனக் கூறி கடந்து சென்றுள்ளார். வீரமணியைக் காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீரமணியை மிரட்டி பலர் பணம் பறித்துள்ளனர், இந்த விவகாரத்தில் காவல்துறையைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு உள்ளது. அப்போதைய முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தார்?

வீரமணி வழக்கை தவெக அரசு மறைக்க முற்பட்டதாக, தான் கூறிய கருத்தை தவறாக புரிந்து கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தன்னிடம் கூறினார். இதுகுறித்து அவர் இன்று விளக்கம் அளிப்பார். வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக ஆட்சியில் தகுதியற்றவர் என நிதித்துறையில் இருந்து நீக்கப்பட்டவர் பி.டி.ஆர்., தற்போது கட்சியில் அவருக்கு எந்த மதிப்பும் இல்லை . தொகுதிக்குக்கூட அவர் செல்லாததால்தான் தேர்தலில் தோல்வியடைந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் சுயநலம் காரணமாக அதிமுகவில் இருந்த விசுவாசிகள் அனைவரும் வெளியேறிவிட்டனர். இதே நிலைமை இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவுக்கும் ஏற்படும். அதிமுகவும் திமுகவும் குடும்ப சொத்தாக மாறிவிட்டது.

தேவையான நேரத்தில் பாஜகவை எதிர்ப்போம். ஏற்கனவே வக்ஃபு விவகாரம் மற்றும் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பான விவகாரங்களில் பாஜகவை எதிர்த்துள்ளோம். பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறியதில் நாங்கள் இதுவரை உறுதியாக இருக்கிறோம்.

திமுகவை ஒழிக்க வேண்டும் என ஜெயலலிதா நினைத்தார்; அதை விஜய் செய்து காட்டுவார்.

வீரமணி வழக்கில் கடந்த ஆட்சியில் வழக்குப்பதிவு பதிவு செய்ததே பேரம் பேசுவதற்காகத்தான். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு பேரம் பேசப்பட்டுள்ளது, வழக்குப்பதிவு செய்தவர்கள் ஏன் வீரமணியை கைது செய்யவில்லை?

மின்வெட்டு தொடர்பான பிரச்னைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இன்னும் 3 மாதங்களில் மின்வெட்டு முழுமையாக சரி செய்யப்படும். மின்துறையில் எங்கெங்கு தவறுகள் உள்ளனவோ அவை அனைத்தும் சரி செய்யப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

summary

Several police personnel linked to the Gem Veeramani case; Power cuts will be resolved in three months: Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments