FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லியால் தள்ளாடும் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்! ராகுலின் ஒப்புதலுக்கு காத்திருப்பு!

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்துக்கு ராகுல் காந்தி இதுவரை ஒப்புதல் அளிக்காதது குறித்து...

Updated On : 30 ஜூலை 2026, 4:05 pm IST
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உடன் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார். - X
பகிர்:

கர்நாடகத்தின் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

கர்நாடகத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்ததால் முதல்வராகப் பதவி வகித்து வந்த சித்தராமையா மே மாதம் ராஜிநாமா செய்தார். இதையடுத்து, டி.கே. சிவகுமார் கடந்த ஜூன் 3 அன்று புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

முதல்வர் சிவகுமார் தலைமையிலான அரசு அமைந்து சுமார் 50 நாள்களைக் கடந்துள்ள நிலையில், இதுவரை கர்நாடகத்தின் அமைச்சரவை முழுவதுமாக நிரப்பப்படவில்லை. இதனால், ஏராளமான மக்கள் பணிகள் முடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

கர்நாடகத்தின் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவதற்காக காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இருப்பினும், தில்லியில் காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபாலுடன் நடைபெற்ற ஆலோசனைகளுக்குப் பிறகு 12 பேர் கொண்ட புதிய அமைச்சரவையின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கர்நாடகத்தின் புதிய காங்கிரஸ் அமைச்சரவையின் பட்டியலுக்கு இன்று (ஜூலை 30) மாலை ராகுல் காந்தி ஒப்புதல் அளித்துவிட்டால், நாளை மாலை பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக, முதல்வர் டி.கே. சிவகுமார், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.கே. ஹரிபிரசாத் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் தில்லியிலேயே முகாமிட்டுள்ளனர்.

ஏற்கெனவே, ராகுல் காந்தி மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் இடையே நேற்று மாலை நடைபெறவிருந்த சந்திப்பு, நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் தில்லியில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளால் ஒத்திவைக்கப்பட்டது.

இதனால், இன்று கர்நாடக ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவுக்காகச் செய்யப்பட்ட ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிக்க நேரம் ஒதுக்காமல் ராகுல் காந்தி இழுத்தடிப்பதாகவும், அவர் கன்னட மக்களை இழிவுப்படுத்துவதாகவும் கர்நாடக பாஜக மூத்த தலைவர் விஜேந்திரா எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.

summary

discussions regarding the expansion of the Karnataka cabinet will be held this evening with Rahul Gandhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments