மே.வங்க இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் கைது! ராகுல், ரிதப்ரதா இடையே மோதல்!
மேற்கு வங்க இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராகுல், ரிதப்ரதா இடையே கருத்து மோதல்...
மேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதி இடைத்தேர்தலின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி அணித் தலைவர் ரிதப்ரதா பானர்ஜி இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள நந்திகிராம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் மிலன் பிரதானுக்கு, முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி ஆதரவு அளிப்பதாக நேற்று (செப். 18) அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மமதா ஆதரவளித்த சில மணிநேரங்களில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலம் கையகப்படுத்தலுக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் மிலன் பிரதான் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில், காங்கிரஸ் கட்சி அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து, மிலன் பிரதான் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும், ஜனநாயகப் படுகொலை எனவும் விமர்சித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நேற்று இரவு விடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த விடியோவில் அவர் கூறியதாவது,
“நேர்மையான தேர்தலில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் சில சமயங்களில் வாக்குத் திருட்டு, சில சமயங்களில் ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் சில சமயங்களில் கட்சிகளைக் கைப்பற்றுதல் ஆகியவற்றின் மூலம் அதிகாரத்தைத் தக்கவைக்க முயற்சிக்கிறது.
அவர்களுக்குத் தேர்தலில் போட்டியிடுவதில் விருப்பமில்லை; தேர்தலையே முற்றிலுமாக ஒழிக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். இதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சி அஞ்சாது, அடிப்பணியாது. நாங்கள் போராடுவோம், நிச்சயம் வெற்றி பெறுவோம்” எனக் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி விடியோ வெளியிட்ட சில மணிநேரங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி அணித் தலைவர் ரிதப்ரதா பானர்ஜி அதற்கு எதிப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ் அணியான நாங்கள், மூன்று கொலை வழக்குகள் நிலுவையிலுள்ள மிலன் பிரதான் மீது புகார் அளித்துள்ளோம். தேர்தலின்போது பிடிவாரண்ட் நிறைவேற்றப்படுவது கட்டாயமாகும். மாநில காங்கிரஸ் தலைமை இதுபற்றிய உண்மையான விவரங்களை ராகுல் காந்திக்குத் தெரிவிக்கவில்லை என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இடைத்தேர்தலில் போட்டியிட திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. மேலும், மமதா மற்றும் ரிதப்ரதா தரப்புக்குத் தனித்தனி பெயர்கள் மற்றும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
நந்திகிராம் தொகுதியில் களமிறக்கப்பட்ட மமதா தரப்பு வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளருக்கு மமதா பானர்ஜி தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Following the arrest of the Congress party candidate for the Nandigram constituency by-election in West Bengal, a war of words has erupted on social media between Rahul Gandhi and Ritabrata Banerjee.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.