முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

தேர்தல் 1977: எம்.ஜி.ஆர். சகாப்தம் தொடக்கம்!

1977 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நினைவுகள்... தினமணியின் கருவூலப் பக்கங்களிலிருந்து...

Updated On : 1 ஏப்ரல், 2026 at 7:21 AM
பேரவையின் முதல் கூட்டத்தில் உரையாற்றும் ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி... எதிரே எம்ஜிஆர்... - தினமணி கருவூலத்திலிருந்து
பகிர்:

1971-க்குப் பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து நடைபெற்ற 1977 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப் பெரிய மாற்றம் நடைபெற்றது – திரைப்பட நடிகராகப் புகழ்பெற்றிருந்த எம்.ஜி.ஆர். என்கிற எம்.ஜி. ராமச்சந்திரன் முதல்வரானார்.

அண்ணா மறைந்த பிறகு நடைபெற்ற, 1971 சட்டப்பேரவைத் தேர்தலில் 184 தொகுதிகளை வென்று ஆட்சியமைத்த திமுகவில் தொடர்ந்து, உள்கட்சிப் பூசல்கள் தலையெடுக்கத் தொடங்கின. முதல்வரும் கட்சித் தலைவருமான மு. கருணாநிதிக்கும் நடிகரும் கட்சியின் பொருளாளருமான எம்ஜிஆருக்கும் இடையே பகை ஏற்பட்டது.

பொதுவெளியில் கட்சித் தலைமையை விமர்சனம் செய்த எம்ஜிஆர், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதுடன் அமைச்சர்கள் தங்கள் சொத்துவிவரங்களை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் (கட்சியில் ‘கணக்குக் கேட்டார்’ என்று சுருக்கமாகச் சொல்வார்கள்). முட்டலும் மோதலும் தீவிரமடைந்த நிலையில், 1972, அக்டோபர் 10-ல் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்ஜிஆர், தொடர்ந்து கட்சி விரோத செயல்பாட்டுக்காக வெளியேற்றவும் பட்டார்.

இதையடுத்து, 1972, அக். 17 ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் எம்ஜிஆர். 1973, மே மாதத்தில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் புதிதாகத் தொடங்கப்பட்ட எம்ஜிஆரின் அதிமுக பெரும் வெற்றி பெற்றது. ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாமிடம். ஆட்சியிலிருந்த திமுக மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டது.

1975 ஜூனில் நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார் பிரதமர் இந்திரா காந்தி. இது 1977 மார்ச் வரையிலும் நீடித்தது. நெருக்கடி நிலைக்கு எதிராக இருந்தது மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசு.

இதனிடையே, 1975 அக். 2-ல் காமராஜர் மறைந்தார் (1972-லேயே ராஜாஜியும் மறைந்துவிட்டார்). மறைவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஸ்தாபன காங்கிரஸில் பெரும் குழப்பம். கட்சி இரண்டாக உடைந்தது. பெருமளவிலானோர் இந்திரா காங்கிரஸில் இணைந்தனர். 1976, ஜன. 31-ல் திமுக அரசு கலைக்கப்பட்டுத் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. கருணாநிதிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது.

ஏற்கெனவே, முந்தைய 1971 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்திரா காங்கிரஸ், நெருக்கடி நிலை, திமுக அரசு கலைப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து, 1977 மார்ச்சில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் புதிதாகத் தொடங்கப்பட்டு, திண்டுக்கல்லில் வெற்றியும் பெற்றிருந்த அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டது.

நாடு முழுவதும் காங்கிரஸ் தோற்று மத்தியில் ஜனதா அரசு அமைந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அதிமுக 17, இந்திரா காங்கிரஸ் 14, கூட்டணியில் இடம் பெற்ற இந்திய கம்யூ. 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. எதிரணியில் திமுகவும் (மிச்சமிருந்த ஸ்தாபன காங்கிரஸை உள்ளடக்கிய) ஜனதா கட்சியும் இணைந்து போட்டியிட்டு 5 தொகுதிகளில்தான் வென்றது.

மத்தியில் ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், தொடர்ந்து ஜூன் மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிகள் கலைந்துவிட்டன. இரு திராவிட கட்சிகளான அதிமுக, திமுகவும், இரு தேசிய கட்சிகளான காங்கிரஸும்  ஜனதாவும் தனித்தனியே போட்டியிட்டன.

மக்களவைத் தேர்தலில் திமுகவை மக்கள் நிராகரித்துவிட்டதால் ஜனதா கட்சி தனித்துப் போட்டியிடுவதாகக் குறிப்பிட்டார் தஞ்சை பிரசாரக் கூட்டத்தில் பேசிய  பிரதமர் மொரார்ஜி தேசாய். எம்.ஜி. ராமச்சந்திரனிடம் எப்போதுமே ஆளுங்கட்சியின் பக்கமாக இருக்கிற தன்மை உள்ளது. சமீபத்திய லோகசபைத் தேர்தலின்போது, அப்போது மத்திய அரசில் பதவி வகித்த காங்கிரஸை ஆதரித்தார் (இப்போது விலகிவிட்டார்). அவர் ஜனதா கட்சியுடன் கூட்டணி சேருகிற நாள் வெகுதொலைவில் இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜகஜீவன் ராம் குறிப்பிட்டார்.

1977, ஜூன் மாதத்தில் நடைபெற்றது சட்டப்பேரவைத் தேர்தல்.

பெரும்புயலாக இருந்தது இந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் பிரசாரம். அதிகாரத்தை நிலைத்திருக்கச் செய்ய வேண்டிய கட்டாயம் திமுகவுக்கும் கருணாநிதிக்கும். திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டுத் திண்டுக்கல் இடைத்தேர்தலில் வெற்றியும் பெற்ற நிலையில் ஆட்சியைக் கைப்பற்றும் தீவிரம் புதிய கட்சியான அதிமுகவுக்கும் எம்ஜிஆருக்கும்.

அருப்புக்கோட்டைத் தொகுதியில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டார். என்ன நினைத்தாரோ, கடைசி நேரத்தில் அருப்புக்கோட்டையில் எம்.ஜி.ஆரை எதிர்க்க ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுடன் ஓர் உடன்பாட்டுக்கு வரத் தயாராக இருப்பதாகவும் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரை ஆதரித்துத் தனது வேட்பாளரை வாபஸ் பெறவும் தயார் என்றும் திமுக தலைவர் மு. கருணாநிதி அறிவித்தார் (தேர்தல் நிலவரம் அப்படியிருந்தது); ஆனால், அது நடைபெறவில்லை. இதுபற்றி ஜனதா கட்சித் தலைவர் பா. ராமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கவே மறுத்துவிட்டார். காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனாரும் நிராகரித்துவிட்டார்.

ஜூன் 14 – வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கத்திலிருந்தே அதிமுக வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கிவிட்டது. பெரும்பாலான தொகுதிகளில் திமுகவோ, காங்கிரஸோதான் இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றன. மத்தியில் ஆட்சியில் இருந்த ஜனதா கட்சி பெரும்பாலும் கடைசி இடத்தில்தான் இருந்தது.

அருப்புக்கோட்டைத் தொகுதியில் எம்ஜிஆர், தனக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்ற ஜனதா வேட்பாளர் முத்துவேல் சேர்வையைவிட 29,378 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.

சென்னை மாநகரிலும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலும்தான் திமுக அதிக வெற்றிகளைப் பெற்றது. சென்னையில் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே. நகர்) தொகுதி (அதிமுக சார்பில் நடிகர் ஐசரி வேலன் வெற்றி பெற்றார், தோற்றவர் டி.என். அனந்தநாயகி) தவிர 13 தொகுதிகளிலும் திமுக வென்றது. ஆனால், சேலம், தருமபுரி, கோயம்புத்தூர், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் திமுகவுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை.

அதிமுக கூட்டணி 144 தொகுதிகளில் (அதிமுக மட்டும் 130 இடங்களில்) வெற்றி பெற்றது. திமுக 48 தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்திரா காங்கிரஸ் (இனி ஒரே காங்கிரஸ்தான், இந்திய தேசிய காங்கிரஸ்) 27 தொகுதிகளையும் ஜனதா கட்சி 10 தொகுதிகளையும் கைப்பற்றின. (அதிமுக அணியில்) மார்க்சிய கம்யூ. – 12, (காங்கிரஸ் அணியில்) இந்திய கம்யூ. – 5.

1967-ல் நடந்தது ஒரு வரலாற்று மாற்றம். காங்கிரஸ் அரசு தோற்கடிக்கப்பட்டு திமுக அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியது. அடுத்த பத்தாண்டுகளில் மறுபடியும் வரலாறு மாறியது. திமுகவைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது அதிமுக, அடுத்த பத்தாண்டுகளுக்கு – 1987-ல் முதல்வர் எம்ஜிஆர் மறையும்வரை – அவருடைய ஆட்சிதான்.

1977 ஜூன் 30 ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல்வரானார் அதிமுக பொதுச்செயலர் எம்.ஜி.ஆர். சென்னை ராஜாஜி ஹாலில் நடைபெற்ற விழாவில் எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமையில் 14 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

அமைச்சர்கள் கி. மனோகரன் (நிதி), எஸ். ராமச்சந்திரன் (பொ.ப.து.), கே. நாராயணசாமி (சட்டம்), ஜி.ஆர். எட்மண்ட் (உணவு), ஆர்.எம். வீரப்பன் (செய்தி – விளம்பரம்), சி. அரங்கநாயகம் (கல்வி), கா. காளிமுத்து (உள்ளாட்சி), எஸ். ராகவானந்தம் (தொழிலாளர் நலம்), பி. சௌந்தரபாண்டியன் (ஹரிஜன நலன்), சி. பொன்னையன் (போக்குவரத்து), பி.டி. சரஸ்வதி (சமூகநலம்), பி. குழந்தைவேலு (விவசாயம்), கே. ராஜாமுகமது (கைத்தறி).

 ‘1967-ல் முதலாவது திமுக அமைச்சரவைக்குத் தலைமை வகித்த அண்ணா வகுத்த கொள்கைகளையும் லட்சியங்களையும் தனது கட்சி பின்பற்றி நடக்கும். நேர்மையையும் நீதியையும் தவறாது பின்பற்றி மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப  நடந்துகொள்ளும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபடும். இந்த முடிவுகள் அண்ணாவின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையையும் அவற்றை  நிறைவேற்றுவதில் அரசியல்வாதிக்குள்ள பொறுப்பையும் வெளிப்படுத்தியுள்ளது’  என்று அறிக்கை வெளியிட்டார் எம்ஜிஆர்.

வெற்றிக்குப் பின் செய்தியாளர்களுடன் பேசிய எம்.ஜி.ஆர்., ‘மிகப் பெரிய பொறுப்பு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நாங்கள் ஒத்துழைப்போம். எத்தகைய சோதனைகள் தோற்றுவிக்கப்பட்டாலும் கொஞ்சமும் நேர்வழி தவறாது, மக்களுக்கு நாங்கள் கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்றுவதற்காகப் பாடுபடுவோம்’ என்றார்.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகும் திமுக எதிர்க்கட்சியாக வந்திருக்கிறதே என்ற கேள்விக்குப் பதிலளிக்கும்போது, ‘மொழிப் பிரச்சினையில் இரண்டு கட்சிகளும் ஒரே நிலையை மேற்கொண்டுள்ளன. மற்ற பிரச்சினைகளில் மாறுபடலாம். மொழிப் பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்கள் வேறு கட்சிகளை நம்பத் தயாரில்லை’ என்று எம்ஜிஆர் தெரிவித்தார்.

சட்டப்பேரவை திமுக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு. கருணாநிதி, ‘தமிழ்நாட்டில் திமுகவுக்கு இடமேயில்லை என்று தேர்தல் சமயத்தில் வேண்டுமென்றே ஒரு பிரசாரம் செய்யப்பட்டது. அந்தப் பிரசாரம் பொய் என்பது 48 திமுக மெம்பர்களை (எம்எல்ஏக்களை) மக்கள் தேர்ந்தெடுத்ததிலிருந்து தெரிகிறது. எதிர்காலத்துக்கான திட்டத்தைக் கட்சி வகுக்கும். திமுகவின் எதிர்காலம் சிறப்பாக அமையவும் அதன் மூலம் தமிழகத்தின் எதிர்காலம் சிறப்படையவும் கழகம் தனது அணியைப் பலப்படுத்தும்’ என்று குறிப்பிட்டார்.

இந்தத் தேர்தலிலிருந்துதான் தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில், அல்லது அரசியல் களத்தில் காங்கிரஸ் திமுக என்று இரு முனைப்பட்டிருந்த போட்டி, முழுவதுமாக அதிமுக – திமுக எனத் திராவிட கட்சிகளுக்கு மாறி, தேசிய கட்சிகள் ஓரங்கட்டப்படும் நிலைமையேற்பட்டது – அதுவே இன்னமும் அரை நூற்றாண்டாக மாறாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது!

இவ்வாறு, 1977-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையும் உறுப்பினர்களும் முழு ஆயுள்காலத்தைக் கழிக்கவில்லை. மூன்றாண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. 1980 மே மாதத்தில் மீண்டும் சட்டப்பேரவைக்குத் தேர்தல்! இடையே என்ன நடந்தது? எப்படி நடந்தது? முடிவு என்ன?

[தினமணி கருவூலத்தின் பக்கங்களிலிருந்து]

summary

Memories of the 1977 Tamil Nadu Legislative Assembly Elections... From Dinamani Archives...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.